பட்டுக்கோட்டையில், மக்களுடன் முதல்வர் முகாமில், ரூ.1.42 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

மக்களுடன் முதல்வர் முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் நடுவிக்கோட்டை,  நம்பிவயல், ஏரிப்புறக்கரை ஆகிய 3 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்களை, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வியாழக்கிழமை துவக்கி வைத்து, 21 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு  ரூபாய் 1 கோடியே 42 லட்சம் மதிப்பிலான  கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் முன்னிலை வகித்தார். மேலும், நடுவிக்கோட்டை ஊராட்சி நாடியம்மன் திருக்கோவில் மணடபத்திலும், நம்பிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரிப்புறக்கரை ஊராட்சி ரெட் கிராஸ் சமுதாயக் கூடம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 21 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 273 உறுப்பினர்களுக்கு,  ரூபாய் 1 கோடியே 42 லட்சம் மதிப்பிலான  கடனுதவிகளை வழங்கி உயர் கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது,  "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, 'மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்' மூன்றாம் கட்டமாக பட்டுக்கோட்டை  வட்டத்தில் 3 இடங்களில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஏழை எளியோர் நலன் காக்க ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமை பெண் திட்டம். இன்னுயிர் காப்போம், தமிழ்ப் புதல்வன் திட்டம், விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தாழ்த்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் கல்வி உரிமை பெறுவதற்கு சட்டப் பாதுகாப்பையும், சமூக நீதியினையும், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெற்றுத் தந்தார்கள்.  சமூக நீதியினையும் கல்வி உரிமையினையும் தொடர்ந்து அக்கறையுடன் முதலமைச்சர் காப்பாற்றி வருகிறார். பல்வேறு திட்டங்களின் மூலம் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் மக்களை தேடி மக்களது குறைகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் இத்திட்டங்களை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்" என்றார்.  மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் மக்களுடன் முதல்வர் முகாமில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகள், இம்முகாமில் பதிவு செய்து, உடனடி தீர்வாக தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள் என நலத்திட்டங்களை பல்வேறு பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.  இந்நிகழ்ச்சிகளில் பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பழனிவேல், நகர்மன்ற தலைவர் எஸ்.சண்முகப்பிரியா செந்தில்குமார்,  கோட்டாட்சியர் சங்கர், வட்டாட்சியர் தர்மேந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்கென்னடி, வீரமணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story