முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.47 கோடி பேர் பயன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.47 கோடி பேர் பயன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்” என்று சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 18) நடந்த பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பொன்ஜெயசீலன் பேசும்போது, “எனது கூடலூர் தொகுதியில் பல பயனாளிகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு காப்பீட்டு பலன்கள் விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியது: “தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிகம் பேர் பயன்பெறும் வகையில் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், காப்பீட்டு தொகை வரம்பும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சிகிச்சை முறைகளும் 1450-லிருந்து 2050 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதோடு இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் 970-லிருந்து 2175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் எந்தெந்த பயனாளிகளுக்கு எங்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுச்சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் பதிலளித்தார். கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் - உறுப்பினர் பொன்ஜெயசீலன் தொடர்ந்து பேசும்போது, “அரசு கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெறும் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. யுஜிசி விதிமுறைப்படி அவர்களுக்கு ரூ.57,100 ஊதியம் வழங்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பதலிளிக்கும்போது, “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முதலில் ரூ.15 ஆயிரமும் அதன்பிறகு ரூ.5 ஆயிரம் உயர்த்தி ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளில் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
Next Story