ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக்கல்லூரியில் 15 வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது

தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாக்காளர் ஒவ்வொருவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,அவர்கள் வேண்டுகோள்
ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக்கல்லூரியில் 15 வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,அவர்கள் தலைமையேற்று இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி 15 வது தேசிய வாக்காளர் தினம் இன்று மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வாக்காளர் தினத்தின் நோக்கம் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதேயாகும். வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதை எல்லோரும் கொண்டாடும் விதமாக தேர்தல் நேரத்தில் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவதன் மூலம் நம்முடைய நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையை நிலை நிறுத்தலாம். எனவே 18 வயது நிறைவு பெற்றவர்கள் வாக்காளர்களாகவும் அதேபோல் வாக்காளர்களாகாமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்திட உறுதுணையாக இருப்பதுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அனைவரும் வாக்களித்து 100% வாக்களிக்கப்பட்டது என்ற நிலையை மாவட்டத்தில் உருவாக்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,அவர்கள் தெரிவித்தார். பின்னர் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச்சான்று மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்கள். முன்னதாக 15 வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜிசிங் காலோன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று பேரணி நிறைவாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் மன்னர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், வள்ளல் சீதக்காதி விளையாட்டு மைதானத்திலும் மகளிர் குழு மூலம் வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற ரங்கோலி போட்டி மற்றும் மகளிர்களுக்கான விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் பார்வையிட்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுக்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் அவர்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சித்ரா அவர்கள், அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் நாகராஜன் அவர்கள், ராமநாதபுரம் வட்டாட்சியர் சுவாமிநாதன் அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் அவர்கள், தேர்தல் வட்டாட்சியர் முருகேசன் அவர்கள், துணை வட்டாட்சியர்கள் அர்ச்சுணன் அவர்கள், கோபி கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story