ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
X
வியாழக்கிழமை அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தையில் ஏமாந்த வியாபாரிகள் பொதுமக்கள்
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் அதிகாலை 3 மணிக்கே ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் காலையில் சந்தைக்கு வந்த வியாபாரிகளும் விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிறுவாச்சூரில் வழக்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டு சந்தையானது காலை 9 மணியிலிருந்து சுமார் 10 மணிவரை கூட நடைபெறுவது உண்டு. ஆனால் வரும் திங்கட்கிழமை 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நேற்று நள்ளிரவிலேயே பெருமளவில் வியாபாரிகள் கூடத் தொடங்கியுள்ளனர். இதனால் சந்தைக்கு வந்த ஆடுகள் அனைத்தும் அதிகாலை 3 மணிக்குள்ளாகவே விற்று தீர்ந்தன. இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் 5 மணிக்கு மேல் சந்தைக்கு வந்த வியாபாரிகளும், விவசாயிகளும் வெறிச்சோடிய சந்தையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிசெல்லும் நிலை ஏற்பட்டது. இந்த வாரம் வழக்கத்தைக்காட்டிலும் சுமார் 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..
Next Story