தஞ்சாவூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான போலி உரம் கண்டுபிடிப்பு: வேளாண்மைத் துறையினர் நடவடிக்கை

தஞ்சாவூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான போலி உரம் கண்டுபிடிப்பு: வேளாண்மைத் துறையினர் நடவடிக்கை
X
போலி உரம்
தஞ்சாவூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான போலி உரங்களை கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்து வேளாண்மை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் இயற்கை உரம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிஏபி உரம் விற்கப்பட்டு வந்தது. இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் சேலம் வேளாண்மைத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி ஒரு சுமை ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட உரங்களை வேளாண்மைத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில், இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.  மேலும், போலியான உரங்களை கொண்டு வந்தவர்கள், தஞ்சாவூரிலிருந்து கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் தலைவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சாவூர் வடக்கு வீதியில் ஒரு குடோனில் இருந்து இந்த உரமூட்டைகளை ஏற்றி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி இரவு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் வடக்கு வீதிக்கு சென்று அந்த குடோன் குறித்து விசாரித்தனர். ஆனால், குடோன் பூட்டப்பட்டிருந்ததால், அங்கு யாரும் இல்லை. இதையடுத்து வேளாண்மைத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் முன்னிலையில் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், குடோன் உரிமையாளர் தலைமறைவானதாக தெரியவந்தது. இதையடுத்து வியாழக்கிழமை காலை வேளாண்மைத்துறையின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.செல்வராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் இந்திரஜித், உர ஆய்வாளர் தினேஷ்வரன் ஆகியோர் சீல் வைக்கப்பட்ட குடோனுக்கு சென்றனர்.  பின்னர் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 15 டன் எடையிலான போலி உரங்கள், சிமெண்ட் சாக்கு மூட்டைகளில் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த வேளாண்மைத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வேளாண்மைதுறையின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.செல்வராஜ் கூறியது: சேலத்தில் வேளாண்மைதுறையினர் சோதனையில் போலி உரம் கண்டறியப்பட்டதால், அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் வடக்கு வீதியில் அதன் குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரங்கள் குடோனில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடோன் இடத்தின் உரிமையாளர் சரவணா என்பவரிடம் விசாரித்தபோது, குடோனை ஆனந்தராஜ் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த குடோனில், சிமெண்ட் சாக்குகளில் எந்தவித சான்றிதழும் இல்லாமல், உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 15டன் போலி உரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடோனின் உரிமையாளர் ஆனந்தராஜ் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
Next Story