தஞ்சாவூரில் சுடுகாட்டை சோலையாக மாற்றத் திட்டம்... 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன 

தஞ்சாவூரில் சுடுகாட்டை சோலையாக மாற்றத் திட்டம்... 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன 
X
மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாடுகள், வடக்கு வாசல் பகுதியில் உள்ள ராஜாகோரி சுடுகாடு, பர்மா காலனி அருகே உள்ள மாரிகுளம் சுடுகாடு, மானோஜிப்பட்டி பகுதியில் உள்ள சாந்திவனம் சுடுகாடு ஆகியவை அடங்கும். இதில் சாந்திவனம் சுடுகாடு அழகுபடுத்தப்பட்டு பிருந்தாவனமாக மாற்றப்பட்டது. தஞ்சை ராஜா கோரி சுடுகாடு, தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு தஞ்சை மாநகரில் இறந்தவர்களின் உடல்களை அதிக அளவில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இடமாகும். தஞ்சை மராட்டிய மன்னர் குடும்பத்துக்கான மயானம் விளங்கியது. இங்கு மன்னர்கள், ராணிகள், மற்றும் பிற இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த சுடுகாடு மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது. அதிக பரப்பளவைக்கொண்ட இந்த சுடுகாடு கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இந்த கருவேலமரங்கள் அகற்றப்பட்டதனால், தஞ்சை மாநகரில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படும் போது அப்பகுதியில் எப்போதும் புகைமூட்டமாகவும், சுவாசிக்க சற்று சிரமப்படும் அளவில் மாசு நிறைந்த பகுதியாக காணப்படும் அந்த நிலையை மாற்றிடவும், இறுதிச் சடங்கு செய்திட வருவோர் நல்ல காற்றை பெறவும், திட்டமிட்ட தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் புகையால் மாசடைந்த சுடுகாடை மாசற்ற சோலையாக உருவாக்கிட, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டன. அதன்படி மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் முன்னிலையில் வியாழக்கிழமை ராஜாகோரி சுடுகாட்டில் புங்கை, வேம்பு உள்ளிட்ட ஆக்ஸிஜனை அதிகம் தரும் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.  இந்த மரக்கன்றுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் நட்டு தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story