வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,626 ஆக உயர்வு : ஆட்சியர் தகவல்

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,626 ஆக உயர்வு : ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,626 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மார்ச் 27இல் வெளியிடப்பட்ட வாக்குச்சாவடி கள் பட்டியலில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. 7,13,388 ஆண் வாக்காளர்கள், 7,44826 பெண் வாக்காளர்கள் 216 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,58,430 வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1,500-க்கும் மேல் வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளோம். அதன்படி, 1500-க்கும் மேல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் தலா 1, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 என மொத்தம் 4 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டன். இதனால், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,626 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வாக்குச்சாவடி இடமாற்றம், கட்டட மாற்றம், பெயர் மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
Next Story