சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் ரத்ததானம் - ஆர்எஸ்எஸ் ஏற்பாடு
Chennai King 24x7 |6 Jan 2025 4:40 PM GMT
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்-ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பில் சென்னையில் 34 இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்களில் 1,667 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். Nobel World Record அமைப்பு இதனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்-ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி (ஆர்எஸ்எஸ்-ஹெச்எஸ்எஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்எஸ்எஸ்-ஹெச்எஸ்எஸ்-ன் ரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) மாபெரும் ரத்ததான முகாம்களை நேற்று நடத்தியது. சென்னை மாநகரில் ஒரே நாளில் 34 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 1,667 பேர் ரத்ததானம் செய்தனர். நேற்று நடைபெற்ற இந்த விரிவான ரத்ததான முகாம், பல்வேறு சமூக சேவை அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. ஆர்எஸ்எஸ்-ஹெச்எஸ்எஸ் தன்னார்வளர்களின் அயராத முயற்சியால் மொத்தம் 2,750-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முகாம்களுக்கு நேரில் வந்து பதிவு செய்தனர். அவர்களில் 1,667 பேர் ரத்ததானம் செய்தனர். இதன்மூலம், ஒரே நாளில் அதிகபட்ச ரத்ததான முகாம்களை நடத்திய அமைப்பு என்ற சிறப்பை ஆர்எஸ்எஸ்-ஹெச்எஸ்எஸ் பெற்றுள்ளது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 34 முகாம்களும் சிறப்பாக நடைபெற்று, இந்த மாபெரும் சாதனைக்கு வழிவகுத்தன. பல்வேறு சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடும், பொதுமக்களின் ஆர்வமுள்ள பங்கேற்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story