மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட, பில்லங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (27.05.2025) நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது- உங்களின் கோரிக்கைகளை நீங்கள் இருக்கும் இடத்திற்கு அரசு அலுவலர்கள் அனைவரும் வந்து கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக நடத்தப்படுவதே மக்கள் தொடர்புத்திட்ட முகாம்கள். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் நோக்கம், அவற்றைப்பெற எவ்வாறு விண்ப்பிக்க வேண்டும் , எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விரிவாக தகவல்களை அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் இங்கே உங்களுக்கு எடுத்துரைத்தார்கள். உங்கள் குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை கட்டாயம் வழங்குங்கள். கல்வி ஒன்றே நம்மை நல்வழிப்படுத்தும். குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக அரசின் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இலவச பாடப்புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட கல்விக்குத் தேவையான பல பொருட்களை அரசு வழங்குகின்றது. அதுமட்டுமல்லாது முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அரசுப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. நீங்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தால் மட்டும் போதும். வேளாண்மை, கூட்டுறவு, சுகாதாரம் என ஒவ்வொரு துறையின் சார்பிலும் மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஏராளமான திட்டங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்பாக, 23.04.2025 அன்று முதல் சிறப்பு குழுவினரால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 84 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 67 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இம்முகாமில் வருவாய் துறையின் சார்பில் இணையவழி பட்டா, வீட்டுமனை பட்டா 94 பயனாளிகளுக்கு ரூ.1,38,50,000 மதிப்பீட்டிலும், 07 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். வருவாய் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 19 பயனாளிகளுக்கு ரூ.3,26,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சலவைப்பெட்டி 02 பயனாளிகளுக்கு ரூ.13,104 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.6,57,659 மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் புல் நறுக்கும் கருவி 02 பயனாளிகளுக்கு ரூ.29,008 மதிப்பீட்டிலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் மின் மோட்டார் 02 பயனாளிகளுக்கு ரூ.72,940 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 04 பயனாளிகளுக்கு ரூ.43,00,000 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்ப்பு திட்டத்தின் கீழ் 09 பயனாளிகளுக்கு ரூ.22,30,000 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலி கருவி 04 பயனாளிகளுக்கு ரூ.8,994 மதிப்பீட்டிலும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் 05 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை 05 பயனாளிகளுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலும், ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 04 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6,00,000 மதிப்பிலான வங்கி கடனுதவியும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.7,03,500 மதிப்பீட்டிலும் என மொத்தம் 171 பயனாளிகளுக்கு ரூ.2,29,81,205 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல்,இ.ஆ.ப., வேளாண்மை இணை இயக்குநர் பாபு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளர் க.கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story





