தஞ்சாவூர் மாநகராட்சி 18 ஆவது வார்டு, பகுதி சபா கூட்டத்தில் எம்.பி., மேயர் பங்கேற்பு

தஞ்சாவூர் மாநகராட்சி 18 ஆவது வார்டு, பகுதி சபா கூட்டத்தில் எம்.பி., மேயர் பங்கேற்பு
X
பகுதி சபா கூட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு, சிவகங்கை பூங்காவில் பகுதி சபா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பதினெட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சசிகலா தனது வார்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.  கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மேல அலங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச் சாலையின் இருபுறத்திலும் உள்ள மண் பகுதியை பிளேவர் பிளாக் அல்லது கான்கிரீட் தளமாக அமைத்து தர வேண்டும். உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும். தெருக்களை இணைக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வேண்டும். புதிதாக ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  தொடர்ந்து, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பேசுகையில், மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய கோவில் சுற்றுலா வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததன் அடிப்படையில் வளர்ச்சி நிதியாக முதல் தவணையாக ரூபாய் 25 கோடி ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் எட்டாவது உலக அதிசயமாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வழங்குகிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 44 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, 39 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு எதனால் தீர்வு காணப்படவில்லை, அதில் உள்ள பிரச்சினைகள், காரணங்கள் குறித்து மனுதாரர்களுக்கு விளக்கி கூறப்பட்டுள்ளது. தற்போது இங்கு, பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசினார்.  மேயர் சண்.ராமநாதன் பேசுகையில், "மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களை திரட்டி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். இதில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story