காதல் மோக தொடர்புடைய போக்சோ வழக்குகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை கைது செய்ய கூடாது: ஐகோர்ட் கண்டிப்பு

X
சிதம்பரத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவர் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் மற்றும் தருமபுரியில் நடைபெற்ற இளம்வயது திருமணம் போன்ற காதல் மோக வழக்குகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் போலீஸாரால் நடத்தப்பட்ட விதம் குறித்து ஏற்கெனவே கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், சிறார் மீதான போக்சோ வழக்குகளை கையாளுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இதுதொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் அவர் கூறியது: 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறார்களுக்கு இடையிலான காதல் மோகத்தால் ஏற்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சிறுவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தாமல், அவர்களை சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இருவிரல் அல்லது ஆண்மை பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது. காயங்கள் இல்லையென்றால் மருத்துவ பரிசோதனை நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் டிஜிபி சுற்றறிக்கைகளை பிறப்பித்தாலும், இதுதொடர்பான சரியான புரிதல் மற்றும் விழிப்புணர்வு நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இன்னும் ஏற்படவில்லை. இவ்வாறு தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா முரளி, ‘‘போக்சோ வழக்குகளில் சிறுவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதும் இன்னும் தொடர்கிறது. சுமார் 600 வழக்குகள் இருதரப்பிலும் சுமூகமாக பேசி தீர்க்கக்கூடியவையே என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘காதல் மோகத்தால் எழும் குற்றங்களுக்காக பதியப்படும் போக்சோ வழக்குகளில் இருபாலரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கூடாது. இருவிரல், ஆண்மை பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கூடாது. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை காவல், நீதித்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தனர். பின்னர், ஏற்கெனவே மைனர் சிறார்கள் மீதான பல போக்சோ வழக்குகள் சுமூகமாக பேசி முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள 600 வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மனநிலை குறித்தும் அரசு தரப்பில் 8 வார காலத்தில் அறிக்கை தாக்கல் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Next Story

