டிஐஜி வருண்குமாா் வழக்கில் பிப்.19-இல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக உத்தரவு
Tiruchirappalli King 24x7 |22 Jan 2025 11:09 AM GMT
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிப்ரவரி 19-ஆம் தேதி ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருச்சி சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) வருண்குமாா் தொடா்ந்த வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிப்ரவரி 19-ஆம் தேதி ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் சீமான் தூண்டுதலின்பேரில், நாம் தமிழா் கட்சியினா் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் புகாா் கூறி, திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமாா் வழக்குத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை டிச. 27-ஆம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. நஷ்ட ஈடு கோரி தனிநபா் வழக்காக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளித்தாா். வருண்குமாா் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகரைச் சோ்ந்த சுயதொழில் செய்து வரும் மணிகண்டன் (36) என்பவா் ஆஜராகி, வருண்குமாா் தரப்பின் மேலும் ஒரு சாட்சியாக, சாட்சியம் அளித்தாா். இவ்வழக்கின் புகாா்தாரா் தரப்பிலான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், பிப்ரவரி 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி (பொறுப்பு) பாலாஜி உத்தரவிட்டாா். இதனிடையே, மணப்பாறையைச் சோ்ந்த வழக்குரைஞா் முரளி கிருஷ்ணன், சீமான் மீது தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தது தொடா்பாக வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதை தொடா்ந்து, வியாழக்கிழமை திருச்சி இரண்டாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிா்பாா்ப்பதாக வழக்குரைஞா் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்
Next Story