பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் சேவை துவக்கம்... 19 ஆண்டுகால கனவு நனவாவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி

X
அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக 2006 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்ற கம்பன் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. 2019 இல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு சென்னைக்கான இரவு ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவின் போது தாம்பரம் ராமேஸ்வரம் தாம்பரம் (16103/16104) தினசரி இரவு நேர விரைவு ரயில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலுக்கான கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது இந்த தாம்பரம் ராமேஸ்வரம் விரைவு ரயில் ( வண்டி எண் 16103) தினசரி மாலை 06:05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து நள்ளிரவு 12.32 மணிக்கு புறப்பட்டு தொடர்ந்து அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு காலை 05.45 மணிக்கு சென்றடைகிறது மீண்டும் இந்த ரயில் ராமேஸ்வரத்தில் மாலை மதியம் 03.35 மணிக்கு புறப்பட்டு மீண்டும் இதே தடத்தில் பட்டுக்கோட்டைக்கு இரவு 07.50 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து தாம்பரத்திற்கு அடுத்த நாள் அதிகாலை 03.10 மணிக்கு சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 04.00 மணியிலிருந்து புறநகர் ரயில்கள் இயங்க துவங்குகின்றன. இந்த ரயிலில் மாறி எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளுக்கு பயணிகள் செல்லலாம் இந்த ரயில் நவீன எல்.ஹெச்.பி ரயில் பெட்டிகள் மூலம் இயக்கப்பட உள்ளன. குளிர்சாதன வசதியுள்ள இரண்டடுக்கு ஏசி பெட்டி 1, குளிர்சாதன வசதியுள்ள மூன்றடுக்கு பெட்டிகள் 5, சாதாரண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் 4, ஜெனரேட்டர், லக்கேஜ் வேன் 1, மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டி 1 ஆக மொத்தம் 18 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து திருவாரூர் வரை மின்சார ரயில் இஞ்சின் மூலமாகவும், திருவாரூரில் இருந்து ராமேஸ்வரம் வரை டீசல் ரயில் இஞ்சின் மூலமாகவும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி - காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதைகள் முழுவதுமாக மின்மயம் ஆக்கப்பட்ட பிறகு முழுவதும் மின்சார ரயில் இஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ரயில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பயணிகள் சென்னைக்கு சென்று வரவும், ராமேஸ்வரத்திற்கு காலை சென்று தரிசனம் முடித்து மதியம் ஊருக்கு திரும்பி வரவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயிலை இயக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர்கள், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர், கோட்ட இயக்கக மேலாளர், கோட்ட வர்த்தக மேலாளர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு ஆகியோருக்கு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம் துணைத்தலைவர், வே.இராமலிங்கம், செயலாளர் கு.முகேஷ், துணைச் செயலாளர் ஆத்மநாதன், பொருளாளர் ஈகா வைத்தியநாதன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு புதிய ரயில் வரும்போது திரளான மக்கள் கலந்து கொண்டு ரயிலை வரவேற்க காத்திருக்கின்றனர். பேராவூரணி இந்த விரைவு ரயில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ரயில்வே கால அட்டவணையின் படி, பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் 5 ஆம் தேதி ரயில்வே பயணிகள் நலச்சங்கம் , வரத்தகர் சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றன.
Next Story

