தமிழகத்தில் ஆக.19 வரை மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தில் ஆக.19 வரை மிதமான மழை வாய்ப்பு
X
தமிழகத்தில் நாளை (ஆக.14) முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆகஸ்ட் 14-ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் இடையப்பட்டி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோலையார், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும், கோவை மாவட்டம் உபாசி, சின்கோனா, வால்பாறை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Next Story