காங்கேயம் அரசு பள்ளியில் 1994-95ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு

காங்கேயம் அரசு பள்ளியில் 1994-95ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு
X
காங்கேயம் அரசு பள்ளியில் 1994-95ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு - அடுத்த ஆண்டு நடைபெறும் பவள விழாவை சிறப்பிக்க முடிவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செயல்பட்டு வரும் ராய்பகதூர் நல்லதம்பி சக்கரை மன்றாடியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994-1995 ஆண்டு "அ" பிரிவில் படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியை சுற்றி பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். மேலும் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ளது ராய்பகதூர் நல்லதம்பி சக்கரை மன்றாடியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியானது 1951ம் ஆண்டு துவங்கப்பட்டது. 19 ஏக்கர் அளவில் அன்று தொடங்கப்பட்டது.தற்போது மாணவ மாணவியர்கள் விடுதிக்கு இடங்களை ஒதுக்கிய பின்னர் தற்போது சுமார் 16 ஏக்கர் அளவில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. தமிழக அளவில் பசுமை பள்ளியாக இந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை சுற்றியும் சுமார் 2000க்கும் மேற்பட்ட அரியவகை மரங்கள்,நாட்டுமரங்கள், 27 நட்சத்திரங்களுக்கு உண்டான மூலிகை மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் நடவு செய்யப்பட்டு சொட்டு நீர் பாசனம் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்த சிறப்பான பள்ளியில் அடுத்த ஆண்டு பவள விழா காண உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான தொழிலதிபர்கள்,அரசு அதிகாரிகள்,மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள்,பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திறமையாளர்களை உருவாக்கிய பள்ளியில் 1994-1995 ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு "அ" பிரிவில் படித்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு "உன்னதமான உறவுகள் " என்று பெயரிடப்பட்டு தொலைபேசியில் குழுக்கள் அமைத்து தொடர்பு கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த வகுப்பில் 44 மாணவ மாணவியர்கள் படித்ததில் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே வகுப்பில் குடும்பத்துடன் அமர்ந்து 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்ந்து, பார்த்து, பேசி, மகிழ்ந்தனர். மேலும் பள்ளியை சுற்றி உள்ள ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்தனர். இந்த கூட்டத்தை தனகுமார் மற்றும் ராஜா சண்முகம் ஆகியோர் ஒன்றிணைத்து வரவேற்று பேசினார்கள். 30 வருடங்களுக்கு முன் 2 வருடங்கள் படித்த பள்ளியை 1 நாள் முழுவதும் வகுப்பில் அமர்ந்து பேசியும், பள்ளி சுற்றி பார்த்தும் ரசித்தனர். மேலும் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் 75ம் ஆண்டு பவள விழா நிகழ்விற்கு பள்ளிக்கு தேவையான சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தேவையான உதவிகள் முன்னாள் மாணவ மாணவியர்கள் செய்வது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 75 ஆண்டுகள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற இந்த பள்ளியில் இரண்டாண்டு (+1,+2) படித்த மாணவ மாணவர்கள் இணைந்து உதவிட நினைப்பது போல் ஒவ்வொரு ஆண்டும் படித்த மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து உதவினால் இன்னும் பள்ளியை மேம்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Next Story