உடல்களை எரிக்க ரூ.2 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை

உடல்களை எரிக்க ரூ.2 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை
ரூ.2 கோடியில் நவீன தகன மேடை 
நவீன தகன மேடையை திறந்து வைத்த அமைச்சர் காந்தி.

ஆற்காடு நகராட்சி பாலாற்றங்கரையோரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சசிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், ”தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான மக்களாட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை எவ்வித கட்சி பேதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. அவ்வகையில் ஆற்காட்டில் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையானது சிறந்த முறையில், ஒவ்வொன்றும் ஸ்டார் ஹோட்டலில் உள்ளது போன்று கட்டப்பட்டுள்ளது. உள்ளே வந்து பார்க்கும் பொழுது, இது எரிவாயு தகனமேடையா? என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, மிகவும் பிரமிப்பாக உள்ளது.

இதற்காக நிதி வழங்கிய மாகாத்மா காந்தி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு மனதார பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொது மக்கள் இதுபோன்ற திட்டப் பணிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். இந்த நவீன எரிவாயு தகன மேடை கட்டமைப்பில் எரிமேடை அறை, உடல்களை வைத்து பூஜை செய்ய அரிச்சந்திரன் சிலை மற்றும் பொதுமக்கள் அமர 100 இருக்கைகள் கொண்ட பூஜை செய்யும் இடம், கழிப்பறை, அஸ்தி வைக்கும் இடம், சடங்குகள் செய்யும் இடம், அணையா விளக்கு போன்ற பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர்.ஜெ.லட்சுமணன்,பென்ஸ் பாண்டியன், சஜன் ராஜ் ஜெயின், பக்தவச்சலம், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், பொறியாளர் எழிலரசன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story