சேலம் புதிய பஸ் நிலையத்தில் டிரைவரிடம் செல்போன் திருடிய 2 சிறுவர்கள் கைது

போலீசார் நடவடிக்கை
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 33). இவர், சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், தான் ஓட்டும் வேனை கடை அருகே நிறுத்திவிட்டு புதிய பஸ் நிலையத்திற்குள் சென்று கோவை பஸ்கள் நிற்கும் இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது அருகில் வந்து அமர்ந்த 2 சிறுவர்கள், சதீஷிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரிடம் இருந்து செல்போன், ரூ.300 ஆகியவற்றை திருடி சென்றனர். இதை பஸ்நிலையத்தில் இருந்த சில பயணிகள் கவனித்து, 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து லாரி டிரைவர் சதீஷ் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன், பணம் திருடியவர்கள் கெங்கவல்லி வீரகனூரை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவர்களை போலீசார் கைது செய்து செல்போன்,பணத்தை மீட்டனர். பின்னர் 2 சிறுவர்களையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Next Story