குரூப் 2 தேர்வு மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

குரூப் 2 தேர்வு மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 796 பேர் குரூப் 2 தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ-ல் உள்ள பணிகளுக்கான முதல்நிலைத்தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 36 மையங்களிலும், கோவில்பட்டியில் 22 மையங்களிலும், ஸ்ரீவைகுண்டத்தில் 4 மையங்களிலும், திருச்செந்தூரில் 11 மையங்கள் என மொத்தம் 73 மையங்களில் நடந்தது. தேர்வை மொத்தம் 15 ஆயிரத்து 188 பேர் எழுதினர். தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. 9 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வுக்கு, மாவட்டத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 84 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு எழுத 15 ஆயிரத்து 188 பேர் மட்டுமே வந்திருந்தனர். 4 ஆயிரத்து 796 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுப் பணிகளை கண்காணிக்கும் வகையில் மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் தேர்வு மையங்களுக்கு, தேர்வு எழுதுபவர்கள் எளிதில் சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வு நடைபெற்ற தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய மையங்களில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Next Story