திருப்பூரில் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மோசடி செய்தவர்கள் 2 பேர் கைது!
Tiruppur (North) King 24x7 |25 Sep 2024 11:23 AM GMT
திருப்பூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மோசடி செய்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்,பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலி வர்த்தக செயலி மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரியல் எஸ்டேட் அதிபரிடம் 24 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ராஜேஷ் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் அது மட்டும் இன்றி பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்து செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான வழிகாட்டும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக மொபைல் எண்ணில் இருந்து ராஜேஷுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் தான் ஒரு பெண் என்றும், தனக்குத் தெரிந்த ஒரு அப்ளிகேஷனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், அதற்காக இந்த BRIIFL.apk அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட ராஜேஷும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார் மேலும் அதில் தனது வங்கிக் கணக்கை இணைத்து பல தவணைகளாக சுமார் 24 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க நினைக்கும் பொழுது, மீண்டும் 10 லட்சம் கட்டினால் மட்டுமே மொத்த பணமும் கிடைக்கும் என அந்த செயலியில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அந்த அப்ளிகேஷன் குறித்து விசாரித்ததில் அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ராஜேஷ் தனது வங்கியில் இருந்து எந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார் என்பது குறித்து விவரங்களை சேகரித்து வங்கியின் உதவியுடன், பணம் பெற்றவரின் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்தனர். அந்த வங்கிக் கணக்குகள் மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி(41), திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி சேர்ந்த மைதீன் பாட்ஷா(37) என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் போலியாக அப்ளிகேஷனை உருவாக்கி, இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, பெண் போல் குறுந்தகவல் அனுப்பி ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Next Story