நவதிருப்பதி ஸ்தலங்களில் குவிந்த பக்தர்கள். 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம்!
Thoothukudi King 24x7 |28 Sep 2024 4:43 AM GMT
பள்ளிகள் விடுமுறை. புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி ஸ்தலங்களில் குவிந்த பக்தர்கள். 2 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்.
வைணவ ஸ்தலங்களில் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாகும். இன்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு அனைத்து வைணவ ஸ்தலங்களாக விளங்கும் பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இந்த நிலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலங்களாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்பது ஸ்தலங்களாக விளங்குகின்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் திருப்புளியங்குடி காய்ச்சினிவேந்த பெருமாள், இரட்டை திருப்பதி அரவிந்தலோச்சனார், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் என ஒன்பது நவதிருப்பதி ஸ்தலங்களிலும் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
Next Story