பரமத்தி வேலூர் அருகே 2 பேரை பாட்டிலால் குத்தியவர் கைது.

பரமத்தி வேலூர் அருகே 2 பேரை பாட்டிலால் குத்தியவர் கைது.
X
பரமத்தி வேலூர் அருகே 2 பேரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்,டிச.1: பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (25), கட்டிட மேஸ்திரி. நன்செய் இடையாறு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் இளைய பாரதி (24). இவர்கள் இருவரும் குப்புச்சி பாளையம் இரட்டை வாய்க்கால் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு அருகே குப்புச்சி பாளையம், ராஜா நகரை சேர்ந்த பைக் மெக்கானிக் சரவணன் (39) என்பவர் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். இவருக்கும்,ராஜாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் மதுபாட்டிலை உடைத்து ராஜாவை குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த இளையபாரதியையும் குத்தி அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த ராஜா, இளைய பாரதி ஆகிய இருவரையும் காப்பாற்றி வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மெக்கானிக் சரவணனை கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story