சத்தியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

X
சத்தியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது சத்தி பஸ் நிலையத்தில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீஸார் பஸ் நிலையத்திற்குள் சோதனை நடத்தினார்கள். அப்போது பஸ்நிலைய கழிப்பிடம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனையிட்டனர். அதில் கஞ்சா 2 பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் கர்நாடக மாநிலம் ஹீன்சூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன்கள் ராகுல் (23) , அமல் (19) என தெரியவந்தது. தற்போது அவர்கள் கோவை சரவணம்பட்டியில், தங்கி இருந்து வேலை செய்து வருவதாகவும், ராகுலுக்கு பணம் தேவைப்பட்டதால் பலரிடம் பணம் கேட்டுள்ளார். கஞ்சா வியாபாரி ஒருவர் அவர்களை தொடர்பு கொண்டு கஞ்சா பார்சலை விற்பனை செய்து வந்தால் பணம் தருவதாக தெரிவித்தார். இதையடுத்து விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.75ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

