பயணிகள் கப்பல் சேவை ஜனவரி 2-ம் தேதி தொடக்கம்

பயணிகள் கப்பல் சேவை         ஜனவரி 2-ம் தேதி தொடக்கம்
மேலாண்மை இயக்குனர் தகவல்
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வானிலை மாற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஆய்வு நேற்று நடைபெற்றது. இதில் சுபம் கப்பல் நிறுவன மேலாண்மை இயக்குனர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ராமேஸ்வரம் முதல் தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் சேவை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபரிடம் பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். இதற்கு சுபம் நிறுவனம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் சேவை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பருவநிலை மாற்றத்திற்கு பிறகு டிசம்பர் 19 -ம் தேதி முதல் கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தற்போது வானிலை மாற்றம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை போன்றவை காரணமாக வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி முதல் மீண்டும் நாகை துறைமுகத்திலிருந்து கப்பல் சேவை தொடங்கப்படும். மேலும், கப்பல் சேவையில் உள்ள சில குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக, நாகப்பட்டினத்தில் இருந்து செல்லும் பயணிகள் அதிகாலை 5 மணிக்கு துறைமுகத்திற்கு வருவதால், அவர்களுக்கு காலை உணவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையிலிருந்து பிற்பகல் புறப்பட்டு நாகை வரும் கப்பலில் மதிய உணவு வழங்கவும் திட்டமிட்டுருக்கிறோம். மேலும் காபி, டீ, பால் போன்றவையும் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முக்கியமாக கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சென்று வர ரூ.9 ஆயிரம் 200 என்று இருந்ததை மாற்றி, தற்போது எட்டு ஆயிரம் 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்கள் உடமைகளை 10 கிலோ வரை கட்டணம் இல்லாமல் எடுத்துச் சொல்லும் வகையில் மாற்றியமைத்துள்ளோம். அதற்கு மேல் அதிக எடை உள்ள பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி எடுத்து செல்ல வேண்டும். அதிகபட்சமாக ஒரு நபர் 60 கிலோ வரை எடுத்துச் செல்ல முடியும். இதற்கு ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளன. இதனால் சுற்றுலா வளர்ச்சி அடையவும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று வரும் வகையிலும் இந்த கட்டண குறிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகளுக்காக பேக்கேஜ் முறையில் ரூ 15 ஆயிரம் கட்டணத்தில் மூன்று நாட்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோல், ஆன்மீக சுற்றுலா செல்ல உள்ளவர்கள் 5 இரவு 6 நாட்கள் தங்க வசதியாக ரூ.30 ஆயிரம் செலவில் பேக்கேஜ் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கும் இணையதளத்தில் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேயம் துறைமுகத்திற்கு மற்றொரு பயணிகள் கப்பல் சேவையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். கப்பல் சேவை தொடங்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களில் நாகை துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் பயணிகள் வரத்து மிக குறைவாக இருந்தது. ஒரு நபரை வைத்துக் கூட கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து சேவை தொடங்கும் போது, வாரத்தில் புதன்கிழமையை தவிர ஆறு நாட்களும் கப்பல் இயக்கப்படும். பயணிகள், வர்த்தகர்களின் ஆதரவோடு தொடர்ந்து கப்பல் சேவை சிறப்பாக இயக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. துறைமுகத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, கேப்டன் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story