மாநகராட்சி பள்ளி கழிப்பறை வீண் 2 ஆண்டாக திறக்கப்படாத அவலம்

மாநகராட்சி பள்ளி கழிப்பறை வீண் 2 ஆண்டாக திறக்கப்படாத அவலம்
X
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் சேக்குபேட்டை, வைகுண்டபுரம் தெருவில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக, கூடுதல் கழிப்பறை கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், 6.77 லட்சம் ரூபாயில், 2022 டிச.,ல் பள்ளி வளாகத்தில் கூடுதல் கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. பணி முடிந்து இரு ஆண்டுக்கு மேலாகியும், கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டு, பள்ளி நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படவில்லை. சிறுநீர் கழிப்பறை கட்டடத்திற்கு கதவும், சுற்றுச்சுவரும் இல்லாததால், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் நுழையும் சமூக விரோதிகள், சிறுநீர் கழிக்கும் பீங்கானில் இணைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களை துண்டித்துள்ளனர். இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி வருகிறது. எனவே, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்திற்கு பள்ளியுடன் இணைத்து சுற்றுச்சுவர் அமைத்து, இரு ஆண்டுகளாக வீணாகும் கழிப்பறையை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story