உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2 உணவகங்களுக்கு சீல்!

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2 உணவகங்களுக்கு சீல்!
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2 உணவகங்களுக்கு சீல்!!
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், செய்தி தாளில் வடை விநியோகம் செய்த 32 உணவு வணிகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோரின் வழிகாட்டுதலில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அச்சிறப்பான செயல்பாட்டினைத் தொடரும் விதமாக, நேற்று (23.12.2024) இரவும், இன்று (24.12.2024) காலையிலும் தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர உணவகங்கள், நிரந்த தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தமாக 104 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 32 கடைகளில் நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்களிலும், அனுமதியற்ற ப்ளாஸ்ட்டிக்குகளிலும் வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விநியோகம் செய்தது கண்டறியப்பட்டு, 4.5 கிலோ நியூஸ் பேப்பரும், 1.5 கிலோ அனுமதியற்ற ப்ளாஸ்ட்டிக்குகளும், 1.5 கிலோ வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டதுடன் அவ்வணிகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உணவு பாதுகாப்புப் பதிவுச் சான்றிதழ் பெற்ற வணிகர்களை நியமன அலுவலர் விசாரித்து, அபராதம் விதித்து உத்திரவிடுவார். உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற வணிகர்களுக்கு எதிராக, மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்திற்கு புறம்பாக உணவு வணிகர்கள் எவரேனும் அச்சிட்ட காகிதங்களில் அல்லது அனுமதியற்ற ப்ளாஸ்ட்டிக் இலை ஷீட் உறை ஆகியவற்றில் உணவுப் பொருட்களை பரிமாறவோ அல்லது விநியோகம் செய்வோ அல்லது பொட்டலமிடவோ செய்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1000/- முதல், அதிகபட்சம் ரூ.25,000/- வரை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது. மேலும், இதுகுறித்தான பொது அறிவிப்பு இம்மாத ஆரம்பத்தில் பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆய்வின்போது இரண்டு உணவகங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் இயங்கியது கண்டறியப்பட்டு, அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உடனடியாக இயக்க நிறுத்த அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, செல்லத்தக்க உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னர் தான், உணவு வணிகத்தைத் துவங்க வேண்டும் எனவும், தவறினால், கடை மூடப்படுவதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 63 அல்லது 58-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதினால், சட்டத்திற்குட்பட்டு வணிகம் செய்து, வணிகத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
Next Story