திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்த சேலம் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
Salem King 24x7 |10 Jan 2025 3:43 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்த சேலம் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி மல்லிகா (வயது 55) 8-ந்தேதி ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான டோக்கனை வாங்கும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டார். மேலும், உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story