லாரி ஓட்டுநரிடம் மிரட்டி பணம் பறித்த ஆர்.டி.ஓவின் கார் ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது

லாரி ஓட்டுநரிடம் மிரட்டி பணம் பறித்த ஆர்.டி.ஓவின் கார் ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது
X
கிரைம்
தஞ்சாவூர் அருகே லாரி ஓட்டுநரிடம் மிரட்டி பணம் பறித்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் (ஆர்.டி.ஓ.) ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பாரதி லாரன்ஸ் (32). லாரி ஓட்டுநர். இவர் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வழியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு வியாழக்கிழமை (மார்ச் 6) லாரியில் ஜல்லி ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே விமானப்படை தளம் பகுதியில் வந்த இந்த லாரியை பின்னால் வந்த கார் முந்திச் சென்று வழிமறித்து நிறுத்தியது. காரிலிருந்து இறங்கிய நபர் காரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) இருக்கிறார் என்றும், உரிமமும், அனுமதிச் சீட்டும் எங்கே எனவும் கேட்டார். நீங்கள் யார் எனக் கேட்ட பாரதி லாரன்ஸிடம், தான், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர் எனக் கூறினார். மேலும், பாரதி லாரன்ஸின் சட்டைப் பையில் இருந்த உரிமம் மற்றும் ரூ. 16 ஆயிரத்து 500 ரொக்கத்தையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர் எனக் கூறிய நபர் பறித்துக் கொண்டு காருக்கு சென்றார்.  இதை பாரதி லாரன்ஸ் தட்டிக் கேட்டபோது, காரில் இருந்த ஓட்டுநர் எனக் கூறிய நபரும், மற்றொருவரும் காரை ஓட்டித் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.  மேலும், இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் பாரதி லாரன்ஸ் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர் ஏ.விவேகானந்தன் (49), பாபநாசம் அருகே நரியனூரைச் சேர்ந்த எஸ்.மாதவன் (39) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
Next Story