முத்தூரில் ரோந்து பணியின் போது போலீசாரிடம் இருந்து தப்பிய கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

முத்தூரில் ரோந்து பணியின் போது போலீசாரிடம் இருந்து தப்பிய கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது
X
முத்தூரில் ரோந்து பணியின் போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் முத்தூர்-ஈரோடு சாலை ரவுண்டானா பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாசம் தலைமையில் போலீசார் கடந்த 7-ந் தேதி இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் அதி வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் காரில் இருந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் காரை வேகமாக எடுத்துக்கொண்டு போலீசாரிடம் இருந்து தப்பி சென்றது. இதனை தொடர்ந்து போலீசார் ஜீப்பில் அந்த காரை துரத்தி சென்ற போது ஊடையம் சாலையில் அந்த கும்பல் காரை நிறுத்தி விட்டு இருட்டில் காட்டுப் பகுதிக்குள் ஓடி தப்பி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் உத்தரவின்படி கார் பறிமுதல் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்தனர்.இதற்கிடையில் கொள்ளை கும்பலை சேர்ந்த முத்தூர், விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் (வயது 25) என்ற வாலிபரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோவை மாவட்டம், வெள்ளலூர், மதுக்கரை பகுதியை சேர்த்த கலைராஜா (35), திருச்சி, முத்தரசநல்லூர், முருகம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலகுமார் (26) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்
Next Story