சேலம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 பொதுத்தேர்வை

X
சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் மணிகண்டன் (17) சுக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வை அவர் வலசையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் எழுதி வருகிறார். கணேசன் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் பெரிதும் அவதியுற்று வந்தார். இதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் கணேசன் பரிதாபமாக இறந்தார். இதனால் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் மிகவும் மனவேதனை அடைந்தனர். மேலும் கணேசனின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். மேலும் மணிகண்டனுக்கு நேற்று வரலாறு பாடத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த துக்க சம்பவத்தால் அவருடைய படிப்பு பாதிக்கப்பட கூடாது என நினைத்த உறவினர்கள், மணிகண்டனுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுதிவிட்டு வருமாறு கூறினர். தொடர்ந்து மணிகண்டன் தனது தந்தையின் உடல் அருகில் நின்று கண்ணீர்மல்க வணங்கிவிட்டு தேர்வு எழுத சென்றார். மாணவர் தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தந்தையின் இறுதிச்சடங்கு நடந்தது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது உடலை வீட்டில் வைத்துவிட்டு மகன் பிளஸ்-2 தேர்வு எழுத சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story

