கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது
X
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). கடந்த பிப்ரவரி மாதம் ஆலமரத்துக்காடு பகுதியில் கஞ்சா விற்ற போது அவரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் சந்தோஷ் வெளிமாநிலத்தில் இருந்து சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்து விற்றது தெரியவந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே அதே போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கணேசன் (25). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் ஆற்றோரம் காய்கறி மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே அதே போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்தோஷ், கணேசன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து சந்தோஷ், கணேசன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
Next Story