சேலம் அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது

X
சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் யாரேனும் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடுகிறார்களா? என்பது குறித்து கண்காணிக்க வனத்துறையினருக்கு சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் உத்தரவிட்டார். அதன்படி, வனவர் ராஜேஷ்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு சேலம் அருகே மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 2 பேர் வனப்பகுதிக் குள் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்து வந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சேலத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 39), சுவில்குமார் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வனப்பகுதியில் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேருக்கும் தலா ரூ.1½ லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இதுபோன்று வனப்பகுதிகளில் அத்துமீறி உள்ளே சென்று வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
Next Story

