தஞ்சையில், சாலை தடுப்பு கட்டையில் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி ஓட்டுநர் படுகாயம் 

விபத்து
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஜெகன்மோகன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் காளிராஜ் (வயது 26 ), தஞ்சை பிள்ளையார்பட்டி பழைய ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் அருண்குமார் (22), ஒரத்தநாடு தாலுகா மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சதீஷ் கண்ணன் (40). இவர்கள் மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து பிராய்லர் கோழிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, அதனை தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டனர்.  லாரியை சதீஷ் கண்ணன் ஓட்டினார். அவர் அருகில் காளிராஜ், அருண்குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்த லாரி திங்கள்கிழமை காலை தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது . அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது.  இந்தக் கோர விபத்தில் காளிராஜ், அருண்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓட்டுநர் சதீஷ் கண்ணன் பலத்த காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சதீஷ் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மேலும் விபத்தில் பலியான காளிராஜ், அருண்குமார் ஆகியோர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் திங்கள்கிழமை காலை நடந்த இந்த கோர விபத்து சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story