சேலத்தில் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு அலுவலர் உட்பட 2 பேர் கைது

லஞ்ச் ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
சேலத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு அலுவலர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர். சேலம் அருகே உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மின் சாதனங்கள் பொருத்த ஒப்பந்ததாரர் சண்முகம் டெண்டர் எடுத்திருந்தார். இதற்கு அனுமதி பெறுவதற்காக அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது,அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வரைவு அலுவலர் ரவி (55), இடைத்தரகர் (45) ஆகியோர் ஒப்பந்ததாரர் சண்முகத்திடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த லஞ்சப் பணத்தை தர விரும்பாத ஒப்பந்ததாரர் சண்முகம் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ. 1 லட்சம் பணத்தை ஒப்பந்ததாரர் சண்முகம் நேற்று பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த முதுநிலை வரைவு அலுவலர் ரவி, இடைத்தரகர் பிரகாஷிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் நரேந்திரன் மற்றும் போலீஸார் முதுநிலை வரைவு அலுவலர் ரவி மற்றும் இடைத்தரகர் பிரகாஷ் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story