ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

X
எட்டயபுரம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணித்த டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு முத்தலாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (56), கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை சரி செய்வதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் ரமேஷ் ஒரு ஆட்டோவில் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடிக்கு புறப்பட்டு சென்றார். ஆட்டோவை தெற்கு முத்துலாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (55) என்பவர் ஓட்டினார். பந்தல்குடியில் பொருட்கள் வாங்கிவிட்டு இரவில் இருவரும் ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 11 மணியளவில் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கில் ஆட்டோ திரும்பியபோது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக ஆட்டோவுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோவை ஓட்டிய முனியசாமி, ஆட்டோவில் இருந்த ரமேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற எட்டயபுரம் போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆம்னி பஸ்சை ஓட்டிய தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த இசக்கிமுத்து (38) என்பவரிடம் எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

