தஞ்சாவூரில், தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த 2 பேர் கைது

கிரைம்
தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு தவணை நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் காவேரி நகரில் பி.எம்.அசோசியேட் என்ற நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் (44), தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலை ரோஸ்லின் நகரைச் சேர்ந்த காயத்ரி (34) நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் தீபாவளி, பொங்கல் மற்றும் சிறுசேமிப்பு திட்டத்தின் முலம் ரூ.1,000, ரூ.500 போன்று மாத தவணையாக 12 மாதம் செலுத்தினால் கூடுதல் போனஸ் மற்றும் பட்டாசு தருவதாக இருவரும் கூறினர். இதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். இவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி தவணைக் காலம் முடிந்தும் பணத்தைத் திருப்பித் தராததால் தொடர்புடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சசிரேகா உள்ளிட்ட 10 பேர் தங்கள் மூலமாக 380 பேர் சுமார் ரூ. 35 லட்சம் முதலீடு செய்ததாகவும், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாகவும் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். இதன் பேரில் தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவில் வழக்கு பதிந்து பிரபாகரன், காயத்ரியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கை விரைவாகச் செயல்பட்டு இருவரையும் கைது செய்த  மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவிமதி தலைமையிலான காவல் துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் பாராட்டினார்.
Next Story