திருச்செங்கோடு நகரில் 2 நாட்களுக்கு ஒரு முறை சீரான காவிரி குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகள்  அலுவலர்களுடன் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தீவிர ஆலோசனை

திருச்செங்கோடு நகராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகத்தை சீராக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  குடிநீர் விநியோகம் செய்யும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுடன் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆலோசனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் தற்போது 20,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு ஆவத்தி பாளையம் பகுதியில் இருந்தும், பூலாம்பட்டியில் இருந்தும் காவிரி நீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதன் மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை நகரில் உள்ள வீடுகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததைத் தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய   திருச்செங்கோடு நகர மன்ற கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு  நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகராட்சி பொறியாளர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது. கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என தொடர்ந்து பல புகார்கள் வருகிறது இதனை களைய என்ன செய்ய வேண்டும், மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏன் புகார் எழுந்துள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியாளர்கள் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாலும், புதியதாக கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும் ஆங்காங்கே ஜே சி பி இயந்திரங்களை கொண்டு தோண்டும் போது  குடிநீர் குழாய்கள், இணைப்புகள் பழுதாகின்றன. இதனை அவ்வப்போது சரி செய்து வருகிறோம். மேலும் ஆவத்திபாளையம் பகுதியிலிருந்து திருச்செங்கோட்டிற்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் இதுபோன்று சிக்கல்கள் எழுவதாக தெரிவித்தனர். இதனை அடுத்து போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்து குடிநீர் இரண்டு நாளைக்கு ஒரு முறை கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்கு அனைத்து பணியாளர்களும் உதவ வேண்டும் என்றும் மேலும் பொதுமக்கள் சிலர் தங்களுக்கு தேவையான குடிநீர் பிடித்த பிறகு அந்த குடிநீரை வீணாக சாக்கடையில் கலக்க விடுகிறார்கள், அது போன்று செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களை குடிநீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து தவறுகள் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடிநீரை விநியோகிக்கும் நபர்கள் முறையாக இரு தினங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நேரம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நமது நகராட்சியில் 38 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள்  இருந்தும் 20,000 இணைப்புகள் மட்டுமே  கொடுக்கப் பட்டுள்ளது. இதனை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி நான்கு வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என இருக்கும் பட்சத்தில் அதனை தனித்தனி இணைப்புகளாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பூலாம்பட்டியில் இருந்து வரும் குடிநீரை கூட்டப்பள்ளி மக்களுக்கு கிடைக்கும் வகையில் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தை இணைக்க  வேண்டும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் நகராட்சி பகுதியில் குடிநீர்  விநியோகம் செய்யும் குழாய்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்டதால் பழுது ஏற்படுவதாகவும் ஒரு இடத்தில் சரி செய்தால் வேறு இடத்தில் உடைப்பு ஏற்படுவதாகவும் புதிய குடிநீர் குழாய்கள் அமைந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என  அலுவலர்கள் தெரிவித்தனர்.   இந்த கூட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
Next Story