கஞ்சா விற்ற 2பேர் கைது : 2 மோட்டார் பைக்குகள் பறிமுதல்
Thoothukudi King 24x7 |22 Oct 2024 4:46 AM GMT
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கோவில்பட்டி பகுதியில் கஞ்சா, புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பாலம் அருகே ஒருவர் கஞ்சா விற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில், மது விலக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மலைக்கார போத்தி அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டு இருந்தவர் போலீசாரை பார்த்தவுடன் வேகமாக தப்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (53) என்பதும், இவர் அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அய்யனார் கோவில் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அப்பகுதிக்கு விரைந்து சென்ற மது விலக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கயத்தாரை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் ஆகாஷ் மாரியப்பன் (24) என்பதும், இவர், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story