திண்டுக்கல் சிபிஎம் நிர்வாகிகள் மீது தாக்குதலைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்.... தஞ்சாவூரில் 2 பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது

X
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய, பாஜக - இந்து முன்னணியினரைக் கண்டித்தும், அவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிபிஎம் தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சையில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில், பழைய பேருந்து நிலையம், விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகில், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை காரணம் காட்டி, தஞ்சை காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இடதுசாரிக் கட்சிகளின் நிர்வாகிகள் 2 பெண்கள் உள்ளிட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, இ.வசந்தி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாவட்ட பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், மாநகரக்குழு வீ.கரிகாலன், வி.கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பில் மூத்த தலைவர் காளியப்பன், மாவட்டச் செயலாளர் தேவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணை செயலாளர் ராவணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் அருள், ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ஏ.ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பங்கேற்ற சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மற்றும் கட்சி தோழர்கள் மீது பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பினர், திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறை, மருத்துவமனையில் இருந்த தோழர்கள் மீது நடந்த தாக்குதலையும் வேடிக்கை பார்த்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சிபிஎம் தோழர்களே தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஏதாவது ஒரு வகையில், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்பினர்களின் நாச வேலைகளை முறியடிப்போம்" என்றார்.
Next Story

