லாரியில் கஞ்சா கடத்திய சம்பவத்தில் நாகையில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
Salem (west) King 24x7 |26 Aug 2024 8:12 AM GMT
தனிப்படை போலீசார் நடவடிக்கை
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக நாகப்பட்டினத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு லட்சுமணன், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 270 கிலோ கஞ்சா பதுக்கி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சேசு கும்மாலா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை லாரியில் சேலம் வழியாக நாகப்பட்டினத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் இரவோடு இரவாக நாகப்பட்டினத்திற்கு விரைந்தனர். பின்னர் அங்கு கஞ்சா கடத்தலில் தொடர்புடைய ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரேனிகுண்டா பகுதியை சேர்ந்த அப்பலா நர்சா (62), பார்வதி (66), சேலம் மாவட்டம் ஆத்தூர் கருமந்துறை கீரைக்காடு பகுதியை சேர்ந்த சடையன் (52) ஆகிய 3 பேரையும் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை சேலத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story