கோவை அருகே விபத்து : 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம் !
கோவை வாளையார் சோதனைச் சாவடி அருகே காரும், நிறுத்தப்பட்டிருந்த லாரியும் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு, குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை சேர்ந்த லாவண்யா (40), மலர் (40) ஆகியோர் தங்களது குழந்தைகளை கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாட்டில் நடைபெற்ற அபாகஸ் (எண் கணிதம்) போட்டியில் கலந்து கொள்ளச்செய்ய, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் காரில் பயணம் மேற்கொண்டனர். போட்டியில் குழந்தைகள் கலந்து கொண்ட பிறகு, அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர்கள் சென்ற கார், கோவையை அடுத்த வாளையார் சோதனைச் சாவடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணம் செய்த லாவண்யா மற்றும் மலர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் லாவண்யாவின் கணவர் சாயிராம் (48), 8 வயது மகன், மலரின் 3 வயது குழந்தை மற்றும் டிரைவர் செல்வன் உள்பட 4 பேர் கடுமையாக காயமடைந்தனர். கஞ்சிக்கோடு தீயணைப்பு வீரர்கள், வாளையார் போலீசாருடன் இணைந்து சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 வயது குழந்தையின் நிலை ஆபத்தானதாக உள்ளது. விபத்து குறித்து வாளையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story




