தாராபுரத்தில் 2 வாலிபர்களை தாக்கிய 4 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 21). அதே பகுதிைய சேர்ந்தவர் சரவணன் என்ற சரவணக்குமார் (29). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சரவணன், அருணிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தத் தொகையை அவர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். தற்போது சரவணன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அருண், செல்போன் மூலம் தான் கொடுத்த பணத்தை சரவணனிடம் கேட்டார். அப்போது தாராபுரத்துக்கு வந்தால் பணத்தை தருவதாக அவர் கூறினார். இதையடுத்து அருண் தனது நண்பரான கோகுல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரத்துக்கு வந்தார். கொளத்துப்பாளையம் தொடர்ந்து கூட்டுறவு நூற்பாலை அருகே அவர்கள் 2 பேரும் வந்தனர். அப்போது அங்கு சரவணன் உள்பட 6 பேர் நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து அருண், சரவணனிடம் தான் கொடுத்த ரூ.25 ஆயிரத்தை கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் உள்பட 6 பேரும் சேர்ந்து அருண் மற்றும் கோகுலை சரமாரியாக தாக்கினர். இதில் அருண் படுகாயம் அடைந்தார். கோகுலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் உள்பட 6 பேரும் சேர்ந்து அருணிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.5 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்தநிலையில் படுகாயம் அடைந்த சரவணன் மற்றும் கோகுலை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார், அந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே தாராபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள், அருணை தாக்கி பணம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சரவணன், தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (35), தாராபுரம் சங்கர் ரைஸ் மில் பகுதியை சேர்ந்த கணேசன் (23), திண்டுக்கல் பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கவியரசு (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story





