நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக கல்விக் கடன் முகாம்கள் மூலம், 2 ஆயிரம் பேருக்கு, ரூ. 50 கோடி கல்விக் கடன்கள் வழங்க இலக்கு..

X
Rasipuram King 24x7 |26 Nov 2025 7:27 PM ISTநாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக கல்விக் கடன் முகாம்கள் மூலம், 2 ஆயிரம் பேருக்கு, ரூ. 50 கோடி கல்விக் கடன்கள் வழங்க இலக்கு..
நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக கல்விக் கடன் முகாம்கள் மூலம், 2 ஆயிரம் பேருக்கு, ரூ. 50 கோடி கல்விக் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மாணவர்களுக்கு அதிக அளவிலான கல்விக் கடன்களை வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் வங்கியில் பெறுகின்ற கல்விக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்*. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாம், புதுச்சத்திரம் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் (26.11.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். இந்த மாபெரும் கல்விக் கடன் முகாமினை, பாராளுமன்ற உறுப்பினர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் K.R.N. இராஜேஷ்குமார் தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா மூர்த்தி உடன் இணைந்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவ மாணவிகளுக்கு, ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுக்கான காசோலைகளை வழங்கினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றி பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி, நாமக்கல் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ - மாணவிகளில் 2 ஆயிரம் பேருக்கு ரூ. 50 கோடி அளவில் கல்விக் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து கல்வி கடன் முகாம்களை கிராம, வட்டார அளவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தி வருகிறது. மேலும் இ-சேவை மைய பணியாளர்களுக்கும் பிரதம மந்திரியின் வித்யாலட்சுமி தளத்தில் கல்வி கடன் விண்ணப்பிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, விஜயலட்சுமி தளத்தில் 192 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நாமக்கலில் நடத்தப்பட்ட முகாமில் 157 பேருக்கு ரூபாய் 14.30 கோடி அளவில் கல்விக் கடன் வழங்கப்பட்டது. கல்விக் கடன்களை பெறுகின்ற மாணவ- மாணவிகள் அவற்றை முறையாக திருப்பி செலுத்த வேண்டும். வருகின்ற இரண்டாம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற கல்வி கடன் பெறுவதற்கான முகாம்கள் வங்கிகள் மூலம் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. துர்காமூர்த்தி கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றி பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயித்து கல்வி கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் இதுபோன்று இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில்தான், உயர்கல்வி பெறுகின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன்கள் வழங்கும்போது, எந்தவித சொத்து ஆதாரமும் இல்லாமல் 7 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்கு 50 கோடி ரூபாய் அளவில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. மாணவர்களின் கல்விக்காக தொடர்ந்து தமிழ்நாடு அரசு, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதோடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் பள்ளி, கல்லூரி கட்டணங்கள், விடுதி கட்டணங்கள், செலுத்துகிறது. தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் நடத்தப்படும் இதுபோன்ற கல்வி கடன் முகாம்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கலந்தாய்வு மூலம் இடம் கிடைத்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு, அவர்கள் கேட்கின்ற கடன் அளவுகளை அதிகரித்து அளிக்க வேண்டும். அதேபோல, பொதுமக்களின் வைத்து நிதிகளில் இருந்து, கல்விக் கடன் பெறுகின்ற மாணவ மாணவிகள் தாங்கள் பெறுகின்ற கல்வி தொடர்களை வங்கிகளுக்கு முறையாக உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான், பிற மாணவ - மாணவிகளுக்கும் வரும் ஆண்டுகளில் கல்வி கடன்களை அந்த வங்கிகள் வழங்க முடியும். சிபில் ஸ்கோர் உள்ளிட்ட நடைமுறைகளை கணக்கிட்டு, நாணயமாக நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே வங்கி கடன்கள் வழங்கப்படும். நாட்டில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து இருப்பதால், கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், நல் ஒழுக்கத்தை கடைபிடித்து, நன்கு படித்து, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாய் தந்தையரிடம் அன்பு செலுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களிடம் மரியாதை செலுத்த வேண்டும். இதனை இரு கண்களாகக் கொண்டு, எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாயத்தை அமைக்கின்ற இளைய பாரதமாக, இந்த நாட்டின் தூண்களாக நீங்கள் திகழ வேண்டும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN இராஜேஷ்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், வெண்ணந்தூர் அட்மா குழுத் தலைவர் R.M. துரைசாமி, கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி. அரங்கண்ணல், தனித்துணை வட்டாட்சியர் சு. சுந்தரராஜன், துறை அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்..
Next Story
