நீலகிரியில் கோடை சீசன் நிறைவு ... 2 மாதங்களில் 6 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் வருகை....
நீலகிரியில் கோடை சீசன் நிறைவு ... 2 மாதங்களில் 6 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் வருகை.... கடந்தாண்டை காட்டிலும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு... கோடை சீசனை முன்னிட்டு தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பூங்காக்களில் திரைப்பட படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் ... படப்பிடிப்பிற்கு அனுமதி ... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர ஆண்டுதோறும் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டன. மேலும் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டன. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காணவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு கடந்த மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1.84 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர். இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்தனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கோடை சீசனை கொண்டாட அதிகளவு சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் கோடைக்காலத்தில் நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்தாண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அமுல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் கடந்தாண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் உதகை வருவதற்கு இ-பாஸ் எடுத்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்தாண்டு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவதை தவிர்த்தனர். இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையாலும், கடந்த 25-ந்தேதி முதல் மழை பெய்த நிலையிலும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கொண்டே வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்து உள்ளனர். இந்நிலையில் கோடை சீசன் துவங்கியதால் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறும் ஏற்படாமல் இருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சினிமா திரைப்பட படப்பிடிப்பிற்கு தோட்டக்கலை துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கோடை விழாக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத்துறை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story



