விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Komarapalayam King 24x7 |7 Jan 2025 2:41 PM GMT
குமாரபாளையத்தில் ஜனநாயக விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் 20% போனஸ் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிவில் இயங்கி வருகின்றன இந்த தொழிலில் நூல் ஓட்டுபவர் தார் போடுபவர் அச்சுபிணைப்பவர் என சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் திருநாளையொட்டி போனஸ் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் விழா நெருங்கி வரும் சூழ்நிலையில் விசைத்தறித் தொழிலாளர்கள் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வராத சூழ்நிலையில் சேலம் தொழிலாளர் நல ஆணையர் செண்பகராமன் தலைமையில் கடந்த மூன்றாம் தேதி விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் முன் வராததால், கடந்த நான்காம் தேதி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் தொழிலாளர் நல ஆணையர் செம்பக ராமன் முன்னிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழ்நிலையில் ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பெருமளவில் பங்கேற்று 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Next Story