மதுக்கடையில் முதல்வர் படம்: பாஜகவினர் 20 பேர் கைது

மதுக்கடையில் முதல்வர் படம்:  பாஜகவினர் 20 பேர் கைது
X
கைது
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையில் முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் மதுபான விற்பனையில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் பாஜக மகளிரணி மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் தமிழக முதல்வர் படத்தை புதன்கிழமை மாலை ஒட்ட முயன்றனர். இது தொடர்பாக 3 பேரை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து மருத்துவக்கல்லூரி முதலாவது நுழைவு வாயில் அருகே பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் தலைமையில் பொதுச் செயலர் ஆர். முரளிதரன், செயலர் சாய் லட்சுமி உள்பட பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல, ரயிலடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுபானக் கடையில் முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Next Story