காங்கேயம் நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் எழுதுபொருள்கள்: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

X
காங்கேயம் நகராட்சியின், நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காங்கேயம் நகராட்சி பதிவறை 2025-2026 ஆம் ஆண்டுக்கான பொதுப் பிரிவு,பொது சுகாதாரம் மற்றும் பொறியாளர் பிரிவு, வருவாய் பிரிவு, நகரமைப்பு பிரிவு, கணினி பிரிவுக்குத் தேவையான ஏ-4 சைஸ் பேப்பர், லீகல் சைஸ் பேப்பர், ரசீதுகள், படிவங்கள், பதிவேடுகள் மற்றும் கணினி பிரிவுக்குத் தேவையான டோனர்கள் ஆகிய எழுது பொருள்களை, நகராட்சி பொது நிதியில் இருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கேயம் நகராட்சி வருவாய் பிரிவில் 2025-2026 ஆம் நிதியாண்டில் சொத்துவரி குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிப்பது தொடர்பாக ஆட்டோ விளம்பரம், விளம்பரப் பதாகை, நாளிதழ் விளம்பரம், துண்டுப் பிரசுரம் மற்றும் புதியதாக ஏற்படுத்தப்படும் வரியில்லா இனங்களை மாவட்ட அரசிதழில் அச்சடித்து பிரசுரம் செய்தல் உள்ளிட்ட விளம்பரப் பணிகளை சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள் பராமரித்தல் மற்றும் மாற்றியமைத்தல், கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

