சேலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா, சொகுசு கார் மற்றும் லாரி சிக்கியது.

சேலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா, சொகுசு கார் மற்றும் லாரி சிக்கியது.
X
இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து சேலம் வழியே பிற மாவட்டங்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தனிப்படை போலீசார் சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டி சோதனைச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கிராமப்புறங்களின் வழியாக சிலர் கஞ்சா, புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று காலை காடையாம்பட்டியில் உள்ள ஒரு தாபா ஓட்டலுக்கு சென்றனர். அப்போது, அங்கு ஒரு லாரியில் இருந்து சொகுசு காருக்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை 2 வாலிபர்கள் மாற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 27), செல்வகுமார் (37) என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி வந்து, சொகுசு காருக்கு மாற்றி சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சொகுசு கார், லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story