மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
X
மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நல்லுக்குறிச்சி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், ஆடு வளர்ப்பு தொகுப்பு 2024-2025 கீழ், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த தீவனம் உற்பத்தி செய்வதற்கான நிலமுள்ள 20 பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வீதம் என மொத்தம் ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அமுத சுரபி நிதியின் கீழ், ரூ.36.40 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசினுடைய மகளிர் மேம்பாட்டு திட்;டத்தில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒரு தன்னார்வலர்களாக, ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும். அதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுவும் குறிப்பாக நமது மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் மகளிர்; சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களும் பல்வேறு தொழில்களை செய்வதற்கு, தங்களுடைய தேவைகளுக்கென்று சுயதொழில், கூட்டமைப்புகள், வங்கிகள் மூலமாக நமது மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாயினை; வங்கிக் கடன்களாக பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் வாங்கிய கடனை சரியாக முதலீடு செய்து கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் பணத்தை அடிப்படைத் தேவைகளுக்கு அதாவது சமுதாயத்தில், பொருளாதாரத்தில், எதிர்பாராத குடும்ப செலவுகளுக்கென்று தான் செலவிடுகிறார்கள். ஆனால், இதனுடைய முக்கியமான நோக்கம் என்னவென்றால், பெண்களுக்கான உண்மையான வலிமை என்ன, பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்ன, பெண்களுக்கான உண்மையான விடுதலை என்ன என்று பார்த்தால், பெண்களுக்கான உண்மையான வலிமையும், விடுதலையும் அவர்களுடைய பொருளாதார வலிமை தான். அதாவது பெண்களின் கையில் பணம் இருக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தான். பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றார்கள் என்றால், குடும்பத்தில், சமுதாயத்தில் அவர்களினுடைய பங்கு என்பது முழுமையாக அங்கீகரிக்கப்படுகிறது. அதனால் தான் பெண்கள் தொழில் தொடங்குபவர்களாக, தொழில் முனைவோர்களாக வர வேண்டும். மேலும், இன்றைக்கு சந்தையில் ஆடுகளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இன்றைக்கு ஒரு 10 ஆடுகள் வாங்கி, அதில் நீங்கள் ஒரு வருடம் உங்களினுடைய முழுமையான உழைப்பினை செலுத்துகிறீர்கள் என்றால் நிச்சயாக ஒரு ஆண்டில் 10 ஆடுகள் 30 ஆடுகளாக பெருகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், ஒரு ஆண்டுகள் பராமரித்தால் நீங்கள் அனைவரும் ஒரு ஆட்டுப்பண்ணையின் உடைய முதலாளியாக மாறக்கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள் ஒரு இரண்டு ஆண்டுக்காலம் ஆடுகளை சரியாக பராமரித்து உங்களினுடைய உழைப்பை செலுத்தினீர்கள் என்றால் இரண்டு ஆண்டு காலத்தில் உங்களின் உடைய குடும்பம் பொருளாதாரம் முன்னேறக்கூடிய அளவிற்கு வருமானத்தை தொடர்ச்சியாக பெற முடியும். எனவே, எந்த ஒரு வெள்ளமும் சிறிய துளியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது, எந்த ஒரு பெரிய கடலும் மழையில் இருந்து விழக்கூடிய ஒரு துளியில் இருந்து தான் வருகிறது என்பது போல, இவற்றையெல்லாம் தொடர்ச்சியாக முழுமையாக முயற்சி செய்தால் நிச்சயமாக மிக பெரிய வாய்ப்பை பெற முடியும். எனவே இந்த கிராமப்புறப் பகுதிகளில் இருக்கக்கூடிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு இது போன்ற திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. இந்த பகுதிகளை குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் போன்ற திட்டங்களில் நிறைய குளங்களை வெட்டுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதி வானம் பார்த்த பூமி ஆகும். இந்த பகுதியில் இயற்கை நமக்கு கொடையாக கொடுக்கக்கூடிய மழையினை நாம் சேகரிக்கக்கூடிய அளவிற்கு குளங்களை வெட்டுவதற்குரிய பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலமாக நீங்கள் ஆடு, மாடு வளர்ப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இது மட்டுமல்லாமல் அரசினுடைய திட்டங்களில் குறிப்பாக இந்த பகுதிகளில் பெண்களுக்கு என்று இருக்கக்கூடிய திட்டங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உடல் நிலையும், மன நிலையும் ஒரு குழந்தையை சுமக்கக் கூடிய அளவில் இல்லை. அதனால் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கிறார்கள். எனவே குழந்தை திருமணத்தை அனைவரும் சமூகமாக சேர்ந்து அவற்றை எதிர்க்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும். நமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள், உரிமைகள், நமக்காக அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் இவற்றையெல்லாம் தெரிந்துக்கொண்டு, அவற்றின் உடைய பயன்களை பெறக்கூடியவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். எனவே, இது போன்ற விழிப்புணர்வுகளை பெற்று, கல்வி வாய்ப்புகளை பெற்று, பொருளாதார வாய்ப்புகளை பெற்று, வாழ்க்கையில் எவ்வளவு உரிமைகள் இருந்தாலும் பொருளாதார வலிமை தான் மிகவும் முக்கியம் எனவும், பெண்கள் அனைவரும் தொழில்களில் வெற்றி பெற்று பெரிய தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.
Next Story