பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
X
இளையான்குடியில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் ரூ.35 லட்சம் பறிமுதல் - காரில் ஆயுதங்களுடன் 6 பேரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலையூரில் காரில் சந்தேகப்படும்படியாக 6 பேர் வந்தனர். அவர்களை சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் தலைமையிலான இளையான்குடி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் தொழில் நிமித்தமாக சாலையூரைச் சேர்ந்த முகமது அசாருதீனை சந்திக்க வந்ததாகத் தெரிவித்ததோடு முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். மேலும் அவர்களிடம் வாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து இளையான்குடி போலீசார் காரில் இருந்த தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம்(36), கே.வி.கே .நகரைச் சேர்ந்த முத்துராஜ்(27), தாளமுத்து நகரைச் சேர்ந்த கா.கனகராஜ்(26), யோவன்(30), க.கனகராஜ்(27), அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ராஜஜோஷ்குமார்(27) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து முகமதுஅசாருதீன் வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரூ.35 லட்சம் மதிப்பிலான பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன அந்த நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்த நிலையில் சட்ட விரோதமாக வைத்திருந்ததால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். முகமது அசாருதீன் எஸ்.டி.பி.ஐ., கட்சி முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது காரில் ஆயுதங்களுடன் பிடிபட்டோரிடம் விசாரித்தபோது முகமது அசாருதீன் வீட்டுக்கு வந்ததாகக் கூறினர். மற்ற சிலர் வெவ்வேறுக் காரணத்தை கூறினர். இதனால், சந்தகத்தின் அடிப்படையில் முகமது அசாருதீன் வீட்டில் சோதனையிட்டபோது 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் காரில் வந்த 6 பேரை கைது செய்துவிட்டோம். 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தலைமறைவான முகமது அசாருதீனை தேடி வருகிறோம், என்று கூறினர்.
Next Story