பட்டுக்கோட்டையில் குடியிருக்கும் இடத்தை விட்டு தனிநபர் அகற்ற முயற்சி  2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் 

உண்ணாவிரதம்
மராட்டிய மாநிலம், காட்கேராவ் சாகேப் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் மகாராஜா சமுத்திரம் கிராமத்தில் உள்ள 2,500 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் எனக் கூறி ஏழை, எளிய மக்களை மிரட்டி பணம் பறிக்கும் போக்கை கண்டித்து 2000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் கிராமத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் அப்பகுதி மக்கள் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மராட்டிய மாநிலம், காட்கே ராவ் சாகேப் குடும்பத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் நீதிமன்றத்தை ஏமாற்றி ஒரு தலைப்பட்ச தீர்ப்பை வைத்துக் கொண்டு வீடுகளை இடிக்க வருவதாக குற்றம் சாட்டியும், நகராட்சி அனுமதியோடு வீடுகள் கட்டி, வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தி மூன்று தலைமுறைகளாக வாழ்த்து வரும் தங்களையும், ஏழை, எளிய மக்களையும் ஆனந்தகுமார் மிரட்டி பணம் பறித்து வருவதாகவும், அவரது போக்கை கண்டித்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மகாராஜ சமுத்திரம் மக்கள் பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு (அதிமுக) தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.கா) துவக்கி வைத்துப் பேசினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா, குடியிருப்போர் நலச்சங்கம் செயலாளர் ரெ.ஞான சூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.  இதில், அனைத்து கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டு உள்ளனர். பின்னர் மாலை 5 மணிக்கு டாக்டர் சதாசிவம் அனைவருக்கும் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.  உண்ணாவிரதப் போராட்டத்தில் சாதி, மதம் பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.  வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக லட்சத் தோப்பு, பெருமாள் கோவில், சிவக் கொல்லை போன்ற பகுதிகளில் இருந்து கிராம மக்கள் பேரணியாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தனர்.
Next Story